Wednesday, June 6, 2012

குட்டிக் குட்டிக் கவிதைகள்


கவிதை : ஒற்றை மோகம்.


தொட்டு விட விரல்கள்
துடி துடிக்கும்
அருகினில் நீயின்றி
படபடக்கும்
இருவிழி ஓரங்கள்
நீர்துளிர்க்கும்
அதிலும் உன்முகம்
எதிரொளிக்கும்
கனவுக்குள் உன் பிம்பம்
குடை பிடிக்கும்
அதிகாலை போர்வைக்குள்
அடம்பிடிக்கும்
போலியாய் துரத்தினும்
மனம் அதட்டும்
குளியலைறைக் கதவையும்
அதுதிறக்கும்.
நீயின்றி நீயிருப்பாய்
மனம்சிலிர்க்கும்
என்றேனும் பிரிவாயோ
உயிர்வியர்க்கும்
உறவுக்குப் பெயரென்ன
தலைகுழம்பும்
பெயருக்கு தேவையென்ன
உள்வினவும்
எப்போது பூக்கவேண்டும்
செடி அறியும்
தப்பாமல் அதுபூக்கும்
நிலை நிலைக்கும்
இப்போது ஏன்பூத்தாய்
வினா வினவும்
கேள்வியே மூடமடா
மனம் சிரிக்கும்.
அரும்பியதை விரும்பியதை
உயிர் அணைக்கும்
திரும்பியதும் திசையெங்கும்
அனல் அடிக்கும்
உரிமையென உள்நெஞ்சம்
உனை அணைக்கும்
இல்லையென சொல்னால் மெய்
வெந்து தணியும்.
பிடித்திருந்தால் வாக்களிக்கலாமே…

கவிதை : அதிகாலை எழில் தேவதை

அதிகாலைக்கு முன்பே
சந்தையில்
அலைபவர்களுக்குத் தெரியும்
தொலைக்கும்
அதிகாலைத் தூக்கம்
எத்தனை புனிதமானதென்பது.
வலுக்கட்டாயமாய்
இமைகளைப் பிரித்து வைத்து
படிக்க முயலும்
மாணவர்களுக்கும்
தெரிந்திருக்கக் கூடும்.
இருளில் மட்டுமே
துழாவித் திரியும்
கூர்க்கா விழிகளும்,
மழை உலுக்கி எழுப்பிய
குடிசை வீடுகளும்
அறிந்திருக்கக் கூடும் அதனை.
உன்
அமைதியான தூக்கத்தை
ரசிப்பதற்காகவே
எழும்பும் எனக்கு மட்டும்
புரியவே இல்லை
அதிகாலைத் தூக்கம்
அத்தனை அற்புதமா ?
பிடித்திருந்தால் வாக்களியுங்கள்.

குட்டிக் குட்டிக் கவிதைகள்





சாரி என்றாள்
செல்லமாய்
நன்றி என்றேன் மெல்லமாய்…
சரேலென மோதிக்கொண்ட
அபாயமற்ற
வளைவு ஒன்றில்

 ________________________________________________________________________________
நீ
பொய் பேசும்போதெல்லாம்
கண்டு பிடித்து விடுகிறேன்,
எப்போதேனும்
உண்மை பேசும் போதோ
சந்தேகப்படுகிறேன்.
 ________________________________________________________________________________
உண்மையைக் காட்டும்
கண்ணாடிகளை
யாருமே விரும்புவதில்லை,
எல்லோருக்கும் தேவைப்படுகிறது
அழகாய்க்
காட்டும் கண்ணாடிகள்.
 
  _______________________________________________________________________
   மொட்டை மாடியில்
தொங்கிக் கொண்டிருக்கிறது
சாயம் போன
பட்டம் ஒன்று,
ஏதோ
சிறுவர்களின் துயரங்களைச் சுமந்தபடி.
 பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

காதல் பூனை

நான்
வளர்த்து வரும்
பூனைக்குட்டிக்கு
இப்போது
புலி நகம் முளைத்திருக்கிறது
அதன்
பற்களில் பல
புலிப்பற்களாகி விட்டன.
முன்பெல்லாம்
மடியிலமர்ந்து கொஞ்சும்.
இப்போதோ
படியிலமர்ந்து உறுமுகிறது.
அதன்
மெல்லிய மின்னல் மீசை
இன்னல்களையே
அள்ளித் தருகிறது.
என்
படுக்கையில் விரித்திருக்கும்
கனவுகளைச்
சுருட்டி வெளியே
எறிய வேண்டுமாம்,
தலை கோதும்
விரல் போதும்
என்றிருந்த என் பூனைக்குட்டி,
கனவுக் கன்றுகளைக் கூட
கட்டக் கூடாதென
கட்டளையிடுகிறது.
கனவுகளை
அவிழ்த்து விட்டு,
பூனையை அனுப்பவேண்டும்.
மீண்டும் வளர்க்க
ஓர்
செல்ல நாய்க்குட்டி
கிடைக்காமலா போய்விடும்.
ஆனாலும்
நினைக்கும் போதெல்லாம்
வலிக்கிறது
பூனை நகக் கீறல்கள்.
*
தமிழிஷில் வாக்களிக்க

கா….கா…காத்திருப்பு….

 
கடந்து போகும்
நபரை
எங்கோ பார்த்திருக்கிறேனோ ?
யாரோ
உற்றுப் பார்க்கிறார்களே
தெரிந்தவர்களோ ?
கடந்து செல்லும்
வாகனத்து சன்னலில்
பரிச்சய முகம் ஏதும்
பயணம் செய்ததோ ?
இந்த நேரத்தில்
இங்கென்ன வேலையென
எந்தக் குரலேனும்
பின் காதில் மோதுமோ ?
என்று
பதட்டம் தின்னும்
பொழுதுகளைத் தானா
காதலா
காத்திருப்பு சுகமென்று
கவிதையில் சொல்கிறாய் ?
தமிழிஷில் வாக்களிக்க….

கவிதை : எதிரேறும் மீன்கள்

ஆளில்லாத தீவிலெனில்
இந்த
சில்மிஷம்
இத்தனை சுவையாய்
இருந்திருக்குமா ?
விரலில் வழியும்
தேனுக்கு இருக்கும்
சுவை
தேனில் அமிழ்ந்திருந்தால்
கிடைத்திருக்குமா ?
கவசங்களே
தேவைப்படாத காதல்
இனித்திருக்குமா ?
பின்னிருக்கைப்
பயணங்கள் தரும் பேருந்து,
கிசுகிசுப்புப்
பேச்சுக்களுக்கான
தொலைபேசி நிறுத்தங்கள்
யார் கண்ணிலும்
படாமல்
உன்னை வந்தடையும்,
பின்னிரவில் எழுதப்பட்ட
மோக மின்னலடிக்கும்
கடிதங்கள்,
இவை தானடி
இனிப்பு.
என்று தான் பேசமுடிகிறது.
படகுக் கரையில்
பயந்தபடி அமர்ந்திருக்கும்
மாலையில்.
தமிழிஷில் வாக்களிக்க…

நான் முள்ளானால்….

முள்ளாய் இருந்து விடச்
சம்மதமெனக்கு,
தழுவலில் காயம் தருவேனோ
என்று தான்
தயங்குகிறேன்.
எப்போதேனும்
நீ
மொட்டுப் பல்லக்கை விட்டு
பூவாய்த்
தரையிறங்குகையில்
தாங்கிப் பிடிக்க முடியாதே
என்னும் வருத்தமும்,
காற்றோடு பேசும்
உன் கலந்துரையாடலில்
உன்னைக்
கைகுலுக்குப் பாராட்ட
முடியாதே எனும் பயமும்,
சில்மிசச் சிந்தனைகளை
முந்தானையில் கட்டி
மோகம் முன்வருகையில்
உன்
இதழ்களை வருட
இயலாதே எனும் கவலையும்,
இவைதான்
என்னை
முள்ளாய் இருக்க விடாமல்
மல்லுக்கு நிற்கின்றன.
பேசாமல்
முள்ளாய் மாறிவிடேன்.
தமிழிஷில் வாக்களிக்க..


கவிதை : யாரும் எழுதாத கவிதைகள்

 

விரித்த புத்தகமும்
திறந்த பேனாவுமாய்,
கண்கள் மூடி
சன்னலோரம் அமர்ந்து
நான்
கவிதை தேடும் தருணங்களில்,
கவிதைகள்
சத்தமில்லாத பாதங்களோடு
பார்வையில்லா சன்னலைப்
பார்த்தபடி கடந்து போகும்
.

Monday, June 4, 2012

கவிதை : பின் தொடரும் சிரிப்புகள்.


கவிதை : பின் தொடரும் சிரிப்புகள்.

என்னுடைய
சிரிப்பைப் பார்த்து
கேலியாகச் சிரிக்கிறது
எனது
இன்னொரு சிரிப்பு.
அதுதான் உண்மையென்பது
அதன் வாதம்,
இது தான் உண்மையென்பது
இதன் நியாயம்.
பின்
இரண்டு மூன்றாகி
கூடைக் கணக்காகி
மாலையில்
என்னைப் பின் தொடர்ந்து
துரத்துகின்றன
சிரிப்புப் பேரணிகள்.
எது
உண்மையான சிரிப்பென்று
ஒத்துக் கொள்ள வேண்டுமாம்
நான்.
மாலையில் சிரிக்கிறேன்
வாசலில் நிற்கும்
மழலையைப் பார்த்து.
தீர்ந்து போய் விடுகிறது
பின் தொடர்ந்த
சிரிப்பின் ஒலிகள்

நட்புக் கவிதைகள்


நட்புக் கவிதைகள்

man-thinking
“எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!! “
என சிலிர்ப்புடன்
பெயர் சொல்லி அழைக்கும்
நண்பனுடன் பேசுகையில்
பயமாய் இருக்கிறது
“எம் பேரு ஞாபகமிருக்கா”
என கேட்டு விடுவானோ ?
அப்பப்போ
போன் பண்ணுடா…
எனும் சம்பிரதாய விசாரிப்புக்கு
“கண்டிப்பா”
என நகர்வான்,
நான் கொடுக்காத நம்பரை
அவன்
எழுதிக் கொள்ளாமலேயே.
பொய்கள் தான்
உண்மையாகவே
நட்பைக் காப்பாற்றுகின்றன.
“நேற்று கூட பேச நினைத்தேன்”
என
யாரோ பேசிக் கடக்கிறார்கள்
செல்போனில்
அவளா இது ?
மீன் வாங்கிச் செல்லும்
பெண்ணிடம்
கொஞ்சமும் மிச்சமில்லை
கால் நூற்றாண்டுக்கு முன்
கண்களில் சிரித்த வசீகரம்.
நட்பு இருப்பதாய்
சொல்லிக் கொள்ளவேனும்
அடிக்கடி
தேவைப்படுகின்றன
வெள்ளிக்கிழமை பார்கள்.
கிராமத்து மௌன வீட்டின்
கம்பி அளியின் ஊடாக
நண்பனின்
புன்னகை முகம் தெரிகிறது.
இறந்து
வெகு நாட்களான பின்னும்.
“ஏழாயிரம் சம்பளம் டா மச்சி”
என
குதூகலித்துச் சொல்லும் நண்பனிடம்
சொன்னதில்லை
பல மடங்கு வாங்கும் நான்.
அவனிடம் மிகுந்திருக்கிறது நட்பு.
யாரை ரொம்பப் பிடிக்கும் ?
எதிர்பார்ப்புடன்
மகளைக் கொஞ்சுகையில்,
தோழியின் பெயரைச் சொல்லி
நட்பைப் பெருமைப்படுத்துகிறது
நர்சரி !
பிடித்திருந்தால் தமிழிஷில் வாக்களிக்கலாமே…